• Profile picture of Raghunathan

    Raghunathan posted an update 8 years, 1 month ago

    தெருக்கூத்து மடியாமல் உயிர்ப்பிக்க…

    கிராமக்கோவில்களில், ஊர் விஷேசங்களில், விடிய விடிய பார்த்து பார்த்து கண்களில் தூக்கம் இருந்தும் கர்ணமோட்சத்தில் அழுது திரௌபதி வஸ்திராபரணத்தில் கோபப்பட்டு, மதுரைவீரன் கதையில் சிலாகித்து அல்லி அரசானிகதை, ஆரவல்லிசூரவல்லி கதை இப்படியெல்லாம் ஆடிக்கலைத்த கட்டைக்கூத்து என்று சொல்லப்பட்ட தெருக்கூத்தை 30,000 கலைஞர்கள் 1500க்கும் மேற்பட்ட குழுக்கள் என 1965களில் தேசிய கிராமப்புற கலைஞர்கள் ஆய்வு நிறுவனத்தின் கணக்கின்படி தரவுகளானது.இன்று 2016ல் வெறும் 42 குழுக்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளது. பனையேரம்மா கூத்து, நார்த்தேவன் குடிகாடு கூத்து, கனியன் கூத்து, ஊழிக்கூத்து என்று ஒய்யாரம் கட்டி ஆடிய கூத்துக்கலை ஓரமாய் கிழிந்த பாயில் கவிழ்ந்துக் கிடக்கிறது. வயதான முதுமையாய், இருபதில் இருந்து 25 கிலோ எடையுள்ள கைக்கட்டை, தலைமுண்டாக, நெஞ்சுப் பட்டை, இடுப்புக்கூம்பு என்று ஒரு குறுமரத்தைத் தாங்கி ஆடிய கால்கள் செயழிலந்துக் கிடக்கின்றன.

    தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் என கூத்துக் கூடிவந்த இடங்கள் ஒப்பாரி வைத்துக் கிடக்கின்றன.கூத்தை காவுகொடுத்து, தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டு மண்டலங்கள் இவை குறித்து என்ன யோசனை செய்திருக்கிறது என்பது கூடக் கேள்விக்குறியே.பல கூத்துக் கலைஞர்கள் கர்நாடகா பக்கத்தில் போய் கூலி வேலை செய்வதும், பல கூத்துக் கலைஞர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் விடிய விடிய காய்கறி மூட்டைத் தூக்கிவிட்டு வாயில் மொய்க்கும் ஈ தெரியாமல் உழைத்து ஓடாய் போனதும் தான் மிச்சம்.புரசையில் வருடம் ஒரு விழா நடத்திக் கூத்துக் கலைஞர்களுக்கு சுதந்திர நாளில் தரப்படும் சீனிமிட்டாய் தருவதுபோல் ஒரு சின்ன அசைவு அவ்வளவு தான். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கூத்துக்கலைஞர்கள் ஒருநாள் தனது கூத்து உடைமைகளை போட்டு எரிக்கப்போகிறோம் என்று அறை கூவல்விட்டனர்.

    உடனே அரசு ஓடிவந்து பூங்காவில் கூத்து என்று ஒருவாரம் நிகழ்வு தந்து தேம்பி நின்றோர்க்கு தேயிலை டீ தந்தது. கூத்துக் கலைஞர்களின் குடும்பம் கவலையோடு தன் சந்ததிகளிடம் இந்தக் கலையை எப்படி ஒப்படைப்பது என்பதனை யோசித்து தலை தாழ்ந்துக் கிடக்கிறது.கூத்துக் கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்பட ஒரு கணக்கெடுப்பு அவசியம். அழியாத இந்தக் கலையை அழித்துவிட துடிக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தின் உச்சத்தை துடைத்தெறிய நம்மிடமும், அரசிடமும் எந்த யோசனையும் இல்லை.

    தலைக்குப்புறக் கிடக்கும் இந்த தாய்க் கலைக்கு மணிமகுடம் சூட்டி மகிழ்ந்த பல கலைஞர்கள் சாவின் பிடியில்.கூத்துக்கென்று ஒரு பள்ளி இல்லை. பல்கலைக்கழகம், அதில் கூத்தின் வழியே ஆளுமை வளர்ச்சி, கூத்தை போற்றி வளர்க்க நினைப்போர்க்கு கலைப்பண்பாட்டுத் துறை மாற்று ஊடகமாய் நின்று பாரம்பரிய இந்தக் கலையைச் சமூக மேம்பாட்டுக்குப் பயன்படுத்த ஆய்வு செய்வது என்று சற்று யோசித்தால்…கூத்து மடியாமல் உயிர்ப்பிக்கும்.