Raghunathan posted an update 8 years ago
விலங்குகள் இல்லா பூமி நிலைத்திருக்காது
விழாக்காலப் பரபரப்புகள், எல்லைப் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு செய்திகள் அன்றாடம் வந்துகொண்டிருக்கிற நிலையில், அவற்றுக்கிடையே தற்போது மற்றொரு மிக முக்கியமான, உலகம் குறித்த அக்கறை உள்ளவர்களின் கவலைக்குரிய தகவல் வந்துள்ளது. உலக வன உயிரினங்களின் எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் மூன்றில் இரண்டுபங்கு (67 விழுக்காடு) அழிந்துவிடும் என்பதேஅது. 2012 நிலவரப்படி ஏற்கெனவே விலங்குத்தொகை 58 விழுக்காடு வீழ்ச்சியடைந்து விட்டது என்றும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.பொதுவாகப் பல்வேறு உயிரினங்களின் எண்ணிக்கை குறைவது என்பது நிகழ்ந்துவந்திருக்கிறது. அந்தப் போக்கைத் தடுத்து நிறுத்துவதற்கான மாற்று முயற்சிகள் பற்றி வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது.
ஆனால் இப்போதோ, இனி திரும்ப முடியாத முனைக்கு வந்துவிட்டோமோ என்ற கவலை ஏற்படுகிறது. லண்டனின் உயிரியல் சமூகம் என்ற அமைப்பும், உலகவனவிலங்குகள் நிதிய என்ற அமைப்பும் இணைந்துமேற்கொண்ட ‘வாழும் கோள் மதிப்பீடு’ என்ற ஆய்வின் முடிவுகள் உலகத்தின் உடனடிக் கவனத்தைக் கோருகின்றன. குறிப்பாக ஏரிகள், ஆறுகள், ஈர நிலங்கள் ஆகியவை சார்ந்த முதுகெலும்பு உயிரினங்கள் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன.1970 முதல் 2012 வரையில், உலகம் முழுவதும்சுமார் 3,700 வகைகளைச் சேர்ந்த 14,000 உயிரினப்பிரிவுகளின் எண்ணிக்கை சரிந்து வந்துள்ளதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2014ல் வெளியிடப்பட்ட முந்தைய ஆய்வறிக்கையின்படி, உலக விலங்குகளின் எண்ணிக்கை 40 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துவிட்டது.
இப்போதைய அறிக்கை, இதுவரையில் செயல்படுத்தப்பட்டவனவிலங்குகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை என்ற உண்மையை உணர்த்துகிறது.பூமியையே மூடிய பனியுகம் உள்ளிட்ட இயற்கைக் காரணங்களால் அவ்வப்போது விலங்குகள் பெரும் எண்ணிக்கையில் அழிவது நிகழ்ந்திருக்கிறது. இப்போதோ, பிரதானமாக மனிதச் செயல்கள் காரணமாகவே இந்த அழிவுநிகழ்கிறது. வன நிலங்கள் வளைப்பு, மிதமிஞ்சிய மீன் பிடிப்பு போன்ற செயல்கள், வனவிலங்குகள் வர்த்தகம், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம். கடல்களில் குறிப்பிட்ட வட்டாரங்களையே தொழிற்சாலை போல் மாற்றி ஒட்டுமொத்த மீன்களையும்உலகளாவிய நிறுவனங்கள் உறிஞ்சி எடுப்பதை ஒரு உதாரணமாகக் காட்டலாம்.
உலக வர்த்தக ஆதிக்க நாடுகளின் தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை மாசு காரணமாகப் பசுமைப்பரப்பு சுருங்குவதும் முக்கியக் காரணம். நடவடிக்கை என்ற பெயரில், எளிய பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைத் தட்டிப்பறிக்கிற காட்சிகளைத்தான் இந்தியா போன்ற நாடுகளில் பார்த்திருக்கிறோம். வனவிலங்குகள் பாதுகாப்பின் அடிப்படை வெறும் பரிவு அல்ல. மாறாக, பூமியின் பிள்ளைகளாக அவற்றுக்கு உள்ள உரிமைகளை அங்கீகரித்தல், விலங்குகளும் இணைந்த இயற்கைச் சமநிலையை உறுதிப்படுத்துவதில்தான் மனிதர்களின் எதிர்காலமும் இருக்கிறது என்றஅறிவியல் புரிதல் அடிப்படையில் உணர்வுப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டிய செயல். இனி கொஞ்சமும் சுணக்கம் கூடாது என்பதையே, ‘நமது பூமி ஆறாவது பெரும் உயிரினஅழிவைச் சந்திக்கக்கூடும்,’ எனக்கூறும்இந்த ஆய்வு அழுத்தமாக எச்சரிக்கிறது.