Raghunathan posted an update 8 years ago
நீதிபதிகளின் காலியிடங்களை நிரப்புவதில் மத்திய அரசு தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நீதித்துறையை மத்திய அரசு துடைத்தெறிய விரும்புகிறதா என்றும் கடுமையாக விமர் சித்துள்ளது.மூன்று நீதிபதிகள் கொண்ட திறந்த அமர்வுநடத்திய விசாரணையின் போது, தலைமை நீதிபதி தாக்குர் “நீதித்துறையை சிதைத்து, இயங்காத நீதிமன்றங்கள் மூலம் நீதியை விரட்ட விரும்புகிறீர்கள்.
கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் இல்லாமல் நீதிமன்றங்கள் முடங்கியுள்ளன. முன்பு அதிகமான நீதிபதிகள், ஆனால் நீதிமன்ற அறைகள் இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றோ நீதிமன்ற அறைகள் உள்ளன, நீதிபதிகள் இல்லை. இப்போது நீதிமன்ற அறைகளை மூடி நீதியை விரட்டி விடுகிறீர்கள். இருதரப்பிலும் இந்த விவகாரத்தில் நிறைய விருப்பு வெறுப்புகள் உள்ளன. தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய (என்.ஜெ.ஏ.சி) சட்டத்தை அரசியல் சாசன அமர்வு நிராகரித்த பிறகு நீதிபதிகள் நியமனங்கள் குறித்து புதிய நடைமுறை ஒப்பந்தம்ஒன்றை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டபிறகும் கடந்த 9 மாதங்களாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார்.
“கடந்த 9 மாதங்களாக கொலீஜியம் கொடுத்த பெயர் பட்டியல் மத்திய அரசிடம் தூங்குகிறது. அந்தப் பெயர்கள் மீது ஏறி நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். எதற்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள்?” என்றும் தலைமை நீதிபதி கேள்வி மேல் கேள்வி எழுப்பினார். அலகாபாத் நீதிமன்றத்திற்கு கொலீஜியம் 18 நீதிபதிகளை பரிந்துரை செய்தது. இதில் அரசு 8 பேரைத் தேர்வு செய்தது. ஆனால், இப்போது அந்த 8 நீதிபதிகளில் 2 பேரை மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தாக்குர்குறிப்பிட்டார். நீதிபதிகள் நியமனம் தொடர் பாக நீதித்துறை சார்ந்த செயலர்கள் மற்றும் பிரதமர் அலுவலக செயலர்களையும் நீதிமன்றம் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு பிறகு அந்த உத்தரவை ரத்து செய்தது. “அரசு நிறுவனங்களிடையே மோதல் போக்கு ஏற்படும் சூழலை நாங்கள் விரும்பவில்லை. இது எந்த ஒருவரின் ஈகோ சம்பந்தப் பட்டதும் அல்ல.
இது தனிப்பட்டதும் அல்ல. இது அவதியுறும் நீதித்துறையின் பிரச்சனை” என்றும் தலைமை நீதிபதி கூறினார். இதற்குப் பதில் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, நீதிபதிகள் நியமனங்களுக்கு முன்பாக நடைமுறை ஒப்பந்தத்திற்குரிய சட்டம் முதலில் இறுதி செய்யப்பட வேண்டும் என்றார். இதற்கு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், “நடைமுறை ஒப்பந்தம் நீதிபதிகள் நியமன நடைமுறையைத் தடுப்பதல்ல என்று சட்ட அமைச்சரும் மத்திய அரசும் பலமுறை கூறிவிட்ட பின்னரும் இதையே திரும்ப திரும்ப கூறாதீர்கள்’’ என்றார். “நடைமுறை புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லாமலேயே அனைத்தையும் செய்துவிட முடியும் என்ற நிலை உள்ள போது இப்போது அது ஏன் தேவை என்று கேட்கிறீர்கள்” என்று முகுல் ரோத்தகி கேள்வி எழுப்பினார்.
இதற்கு டி.எஸ்.தாக்குர், “நடைமுறை புரிந்துணர்வு ஒப்பந்தம் இப்போது இல்லை என்று யார் கூறுவது? நீதிபதிகள் நியமனம் பழைய முறைப்படி நடந் துள்ளது. நாங்கள் பொறுமையாக இருப்பது வேலைக்கு உதவவில்லை என்று புரிந்துக் கொள்கிறோம். நீங்கள் இப்படியே சென்று கொண்டிருந்தால் மீண்டும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைத்து புதிய நடைமுறைஒப்பந்தத்தை உருவாக்கும்வரை நீதிபதிகள் நியமனங்களை அரசு முடக்கி வைக்க முடியாது என்று கூறுவதை தவிர எங்களுக்கு வேறு வழிதெரியவில்லை. நீங்கள் இதனை விரும்புகிறீர்களா?” என்று காட்டமாக கூறினார்.
மேலும் இந்தப் பிரச்சனைக்கு அரசு தீர்வு கண்டு நவம்பர் 11-ம் தேதி பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தார். நீதிபதிகள் நியமன விவகாரத்தில் அரசின் மந்தமான போக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதிவிசாரணையின் போது கடுமையாக கண் டித்தது குறிப்பிடத்தக்கது.