Raghunathan posted an update 8 years ago
காஷ்மீர் பிரச்சனைக்கு அடக்குமுறை தீர்வல்ல! தோழர் திவாகரன் நினைவுக் கருத்தரங்கில் மனித உரிமை செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ் பேச்சு
நாகர்கோவில், அக்.26-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்குமரி மாவட்டச் செயலாளர் தோழர்.பி.திவாகரன் 15 வது நினைவு தின கருந்தரங்கு நிகழ்ச்சி நாகர்கோவில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.முருகேசன் தலைமைதாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி வரவேற்றார். முன்னாள் எம்பி ஏ.வி.பெல்லார்மின் உரையாற்றினார். பேராசிரியர் அ. மார்க்ஸ் ‘காஷ்மீரை காப்போம்’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஷாபாசி நன்றி கூறினார்.கருத்தரங்கில் பேசிய அ. மார்க்ஸ் கூறுகையில், இன்று பற்றியெரிந்து கொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்சனை 70 ஆண்டுகாலமாக, தொடர்ச்சியாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது.
பல்வேறு கட்டங்களில், பல்வேறு வடிவங்களில் இது வெடித்துக் கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியான சட்டப்பூர்வமான போராட்டங்களின் வாயிலாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனகோரிக்கை விடுத்த அவர்கள் அமைதி போராட்டங்கள் பலனின்றி போனதால், ஆயுத போராட்டங்களை கையிலெடுத்தனர். அதன் பின்னர் ஆயுதப் போராட்டங்களையும் கைவிட்டு சுமார் 11ஆண்டு காலமாக முற்றிலும் அமைதியான முறையில் அவர்கள் செயல்பட்டு வந்த நிலையிருந்தது. மீண்டும் அது ஒரு ஆயுதப் போராட்டமாக மாறக்கூடிய சூழலில் நாம் விவாதித்து‘ கொண்டிருக்கிறோம்.புர்ஹான் வானி என்ற 22 வயது இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, மக்கள் எழுச்சி119 நாட்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கமும், அங்கு குவிக்கப்பட்டிருக்கும் ராணுவமும் கடுமையான அடக்குமுறையினால் மக்கள் எழுச்சியை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என நம்பினார்கள்.
இந்த 119நாட்கள் போராட்டத்தில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அரசாங்கமே ஒத்துக்கொண்டுள்ளது. இந்த 100 பேரில் ஒருவர் மட்டுமே ராணுவவீரர், மீதி 99 பேர் கையில் எந்த ஆயுதமும் இல்லாதஇளைஞர்களும், பெண்களும், சிறுவர்களும்தான்.கிட்டத்தட்ட 15,000பேர் படுகாயமுற்றுள்ளனர் என அரசாங்கமே ஒத்துக்கொண்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட 5125 பேரின் கண்கள் பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு பார்வை வருவது சாத்தியமில்லை என்ற நிலை உள்ளது. இந்த 5000 பேரில் 2000 பேர் 20 வயதுக்குட்பட்டவர்கள்.2003 முதல் 2008 வரை காஷ்மீரில் எந்தவிதமான ஆயுதப்போராட்டமும் இல்லை. இந்திய அரசு நினைத்திருந்தால் இந்தகால கட்டத்தை மிகசிறப்பாக பயன்படுத்தி அங்குள்ள மக்களுடன் சுமூகமான முடிவை நோக்கி செல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் 2008 ல் அங்குள்ள அரசியல் கட்சிகள், நடுநிலை அமைப்புகள், மனிதஉரிமை குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றாக இணைந்து ஸ்ரீநகரில் லால்சவுக் என்ற இடத்தில் மிகப்பெரிய அமைதிப்பேரணியை அறிவித்தார்கள். அந்த அமைதிபேரணி அரசால் கலைக்கப்பட்டது.
தடை அறிவிக்கப்பட்டு யாரும்பொது இடங்களில் கூட முடியாத நிலை உருவாக்கப்பட்டது.இதே காலகட்டத்தில்தான் சோபியான் என்றஊரில் ராணுவ வீரர்கள் இரண்டு காஷ்மீர் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொன்றுஆற்றில் எறிந்தனர். தண்டர்பால் என்ற இடத்தில்காஷ்மீரை சேர்ந்த 5 அப்பாவிகளை எல்லைதாண்டிவந்த தீவிரவாதிகள் என்று கூறிசுட்டுக்கொன்ற னர். மச்சில் என்ற இடத்தில் தினசரி 500ரூபாய் தருகிறோம் என்று 5 இளைஞர்களை உபேந்திரகுமார் என்ற அதிகாரி தலைமையிலான ராணுவத்தினர் அழைத்து சென்று சுட்டுக்கொன்று விட்டு பயங்கரவாதிகள் என அறிவித்தனர். அந்த பகுதிமக்கள் மிகப்பெரிய அளவில் போராடி உண்மைகளை வெளிக்கொண்டு வந்தனர். மத்திய அரசின் மனிதவளத்துறையும் அந்த அதிகாரியின் பெயர் குறிப்பிட்டு ராணுவத்திடம் நடவடிக்கை எடுக்கக்கூறியது.
மாநில மனித உரிமை ஆணையமும் இதில்தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை. ஏன் அவர்கள் கைது செய்யப்படவில்லையென்றால் அப்டா சட்டத்தின் படி காவல் துறை அல்லதுராணுவத்தினர் எந்த வீட்டிலும் நுழைந்து அவர்களை பிடித்து செல்லலாம், கொல்லலாம் என்ற அபரிமிதமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த புர்ஹான் வானி என்ற இளைஞர் தோட்டத்தில் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுகிறார். அவரதுஇறுதி ஊர்வலத்தில் 2 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து இன்று வரை காஷ்மீர் மக்கள் ராணுவத்திற்கெதிராக கற்களைவீசி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை அரசு ராணுவ அடக்குமுறையாலும், பெல்லட் குண்டுகளாலும் அடக்கிவிடலாம் என நினைத்தார்கள்.
ஆனால்99 உயிர்களை பலி கொடுத்தும் அந்த போராட்டத்தை காஷ்மீர் மக்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சுமார் ஒரு மாதகாலம் அரசு இந்த சம்பவம் குறித்து பேசவில்லை. அதன்பிறகு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காஷ்மீரில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளுடன் பேசும்போது அவர்கள், காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத அமைப்புகள், பாகிஸ்தான் அரசு மாணவர்கள், பொதுமக்கள் , அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசுபேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் ராஜ்நாத் சிங், தனிநாடு கோரும்பிரிவினைவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என கூறினார்.
காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது நிபந்தனைக்குட்பட்ட இணைப்பாக இருந்தது. மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் காஷ்மீர் மாநிலத்திற்கென்று சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டபிரிவு 370உருவாக்கப்பட்டது. 1947ல் நடந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. பிரச்சனை தீர்க்க வேண்டுமானால் இந்தியஅரசு 1947ல் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதே காஷ்மீர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.